பசு குண்டர்களைத் தடுக்க மாவட்டவாரியான காவல்பிரிவு!- உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் பசுவின் பெயரால் அப்பாவிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்களின் மீது நடவடிக்கையெடுக்க, மாவட்ட வாரியான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷர் காந்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, அமிதவ ராய் மற்றும் ஏ.எம்.கன்வில்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் பசு சேவகர்கள் என்ற பெயரில் அப்பாவிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. ஆனால், மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தீர்வு காண முயற்சி செய்யவில்லை. குறிப்பாக வட மாநிலங்களில் தங்களை பசு சேவகர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித்தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சிங், ‘அகிம்சை மட்டுமே இந்த நாட்டை உருவாக்கும் நம்பிக்கை. மத்திய அரசு வன்முறையை ஒருபோதும் ஆதரிக்காது. வன்முறையில் ஈடுபடும் குண்டர்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவது மாநில அரசுகளின் கடமை’ என வாதிட்டார்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 256ன் படி, அப்பாவிகளின் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. இதை அத்தனை எளிதில் கைகழுவி விட முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
நீதிபதி தீபக் மிஷ்ரா, ‘நீங்கள் தான் இதைத் தடுத்த நிறுத்த வேண்டும்’ என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தாவிடம் வலியுறுத்தினார். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 256ன் படி மத்திய அரசின் நிலை குறித்தும் விளக்கினார்.
இதையடுத்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பசு குண்டர்களால் நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க, மாவட்ட வாரியாக காவல்துறை அதிகாரிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை செப்.22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்