மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் மொழிகள் ஊக்குவிப்பு இணையதளத்தில், காஷ்மீரி மொழிபெயர்ப்புகளை நீக்க காஷ்மீர் பண்டிட்டுகள் சிலர் பரிந்துரை செய்திருப்பதற்கு, பந்திப்போரா இலக்கிய அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீரி மொழிக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எல்லாவகையிலும் கடுமையாக எதிர்த்து போராடுவோம் என்று அந்த அமைப்பின் தலைவர் சூஃபி சவ்கத் தெரிவித்துள்ளார். பண்டிட் வகுப்பிலிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சில உறுப்பினர்களின் அரசியலுக்காக காஷ்மீரி மொழியின் புனிதத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஷா சங்கம் என்ற மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் பாரசீக எழுத்துக்களை பயன்படுத்தி எழுதப்படும் காஷ்மீரி மொழிக்கு பதிலாக, 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிய, சமஸ்கிருத தாக்கம் அதிகமுள்ள ஷர்தா எழுத்துமொழியை பண்டிட்டுகள் ஆதரித்துள்ளனர். பாரசீக எழுத்துகள், முஸ்லிம்கள் உருது மொழியை எழுதுவதுபோல வலமிருந்து இடமாக எழுதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு காஷ்மீரிகளின் மன உணர்வுகளை புரிந்துகொள்ள மறுக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகிறது என்று அவாமி இட்டேஹட் தலைவர் ரஷீத் கூறியிருக்கிறார்.