மத்திய அரசின் அமைப்பான சிபிஐ இனி ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் அந்த அந்த அரசுகளின் முன் அனுமதி பெற்று தான் எந்த ஒரு குற்றச்சாட்டின் பேரிலும், சோதனைகள் மற்றும் விசாரணை நடத்த வேண்டும் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகள் தங்கள் மாநிலத்தில் சிபிஐ அதிகாரிகளுக்கு சோதனை செய்ய வழங்கப்பட்டு இருந்த ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இவ்விரு மாநிலங்களில் சிபிஐக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரிகளின் மோதலே இதற்கு காரணம் என்று ஆந்திர அமைச்சர் தெரிவித்திருந்தார். சிபிஐ அதிகாரிகளை தனது சொந்த விருப்பு வெறுப்புக்காக மத்திய அரசு பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். இதனை ஊழல் கட்சிகளின் அச்சமே என்று பாஜக விமர்சித்து வருகிறது.
கடந்த 8ஆம் தேதியே இந்த நடவடிக்கையை செயல்படுத்த ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி உத்தரவிட்டிருந்தது. அதை அடுத்து நேற்று கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பொது கூட்டத்தில் மம்தா இந்த சிபிஐ ஒப்புதல் வாபஸ் நடவடிக்கையை வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.