டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 15 ஆம் தேதி டெல்லியின் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதில் போலீசார் மாணவர்களை கடுமையாக தாக்கியது சர்ச்சியாயி ஏற்படுத்தியது. இந்த சூழலில், கல்லூரி மாணவர்கள் தில்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவினாலும் அது எதையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக நேற்று நண்பகல் 12 மணி அளவில் டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சீலாம்பூர் என்ற இடத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஒரு கட்டத்தில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் 21 பேர் காயமடைந்தனர். இந்த போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, "ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடந்தது, ஜாலியன்வாலா பாக் போன்றது" என தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக், "ஜாலியன்வாலா பாக் நகரில் ஜெனரல் டயர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது போல, அமித் ஷா அதே வழியில் நாட்டின் குடிமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார். அமித் ஷா டயரை விட எந்த விதத்திலும் குறைவானவர் இல்லை. உத்தவ் தாக்கரே சொன்னது சரியானதுதான்".