கர்நாடக மாநிலத்தில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து யேசு கிறிஸ்து, முகமது நபிகள் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் தொடர்பான பாடத்தை அம்மாநில அரசு நீக்கியுள்ளதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் குறைவான நாட்களே இயங்கும் என அரசுகள் முடிவெடுத்துள்ளன. எனவே, இயக்க நாட்களைப் பொறுத்து பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தின் அளவை குறைக்கும் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டில், 120 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டம் 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாடக் குறைப்பு பணிகள் தற்போது நடந்துவரும் சூழலில், ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலிருந்து யேசு கிறிஸ்து, முகமது நபிகள் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் தொடர்பான பாடத்தை அம்மாநில அரசு நீக்கியுள்ளது. அதேபோல ஏழாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து திப்பு சுல்தானின் வாழ்க்கை தொடர்பான பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, பாடப்பகுதிகளை நீக்கும் மாநில அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கல்வியாளர்கள், மஜத, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆகியோர் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.