நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாதாரண நாட்களிலேயே டெல்லியில் காற்று மாசு என்பது அதிகம், இந்நிலையில் இன்று தூய காற்றை சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் முக்கிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 350 க்கும் மேலாக இருக்கிறது. இது சுவாசிக்க தகுதியற்றது, அதேபோல் அபாயகரமானது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. எப்போதும் நெரிசலுடன் காணப்படும் டெல்லி தற்பொழுது பொதுமக்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது. ஒருபுறம் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மறுபுறம் தூய்மையான காற்று கிடைக்காததால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர் டெல்லிவாசிகள்.
பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் கள்ளச்சந்தையில் பட்டாசு விற்றதாகவும், வெடித்ததாகவும் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் காற்று மாசு இன்று மட்டுமல்லாது நாளும் நாளையும் தொடரும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
டெல்லி காவல்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 13-ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசு வெடித்தவர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 88 கிலோ அளவிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு அதற்கான அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17-ஆம் தேதி வரை டெல்லியில் பெரிய கட்டுமான பணிகள் மற்றும் கல்குவாரிகள் போன்றவை செயல்படவும் அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கை பணிகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது.