தான் எழுதிய கடிதத்திற்கு உரிய பதிலளிக்காவிட்டால் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்க போவதாக அம்மாநில முதல்வருக்கு ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார். அம்மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருக்கிறார். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் இருந்து பஞ்சாப் அரசுக்கு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் மசோதா குறித்து விளக்கம் அளிப்பது குறித்து கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான்க்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுதிய கடிதத்தில், “தான் எழுதிய கடிதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் பதில் அளிக்க வேண்டும். அப்படி பதிலளிக்காவிட்டால் அரசியலமைப்பு சட்ட நடைமுறை சீர்குலைந்துவிட்டதாக கூறி குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன்” என தெரிவித்துள்ளார்.