கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கூட்டணி கட்சியை சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க கால தாமதம் செய்வதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகரை அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும், அதிருப்தி எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
ஏற்கனவே கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தது போல், நாளை (18/07/2019) காலை 11.00 மணியளவில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. முதல்வர் குமாரசாமியின் சகோதரரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணா பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தயவு செய்து வந்து விடுங்கள் என அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், நான் யாரையாவது வேதனைபடுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் தவறு செய்து இருந்தால் அதனை திருத்திக் கொள்கிறேன். உங்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்.
நீங்கள் வந்து விடுங்கள் என அதிருப்தி எம்.எல்.எங்களுக்கு உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார். நாளைய தினம் நடைபெறும் வாக்கெடுப்பில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை, என்றால் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தை சபாநாயகர் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எந்த கட்சியிலும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்வர் குமாரசாமி காங்கிரஸ் தலைவர்களுடன் அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினர். நாடே உற்று நோக்கி வரும் கர்நாடக அரசியலில் இறுதி கட்ட முடிவு நாளை வெளியாகும். பாஜகவின் வியூகங்களை தடுப்பாரா? முதல்வர் குமாரசாமி என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்.