வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய மக்களை அடையாளம் காண அறிமுகம் செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவுப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2018 ஜூலை 30ல் வெளியிடப்பட்ட வரைவுப்பட்டியலில் சுமார் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டதால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. அசாம் முழுவதும் இதனை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அசாமில் வசிக்கும் மொத்த மக்களில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பெயர் இந்த குடிமக்கள் பதிவேட்டின்(NRC) இறுதிப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
பல அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ ஆகியோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இப்படி பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் கவுகாத்தி, சத்கோன் பகுதியை சேர்ந்த முகமது சனாவுல்லா (57) என்ற கார்கில் போர் வீரரின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கார்கில் போரில் கலந்து கொண்டவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், அசாம் எல்லைப் பாதுகாப்பு போலீசில், துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு வந்த பட்டியலிலேயே இவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் இவர் வெளிநாட்டவர் என கூறி தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் அவர் குடும்பத்தினர் வழக்குத் தொடுத்து அவரை ஜாமீனில் வெளியே கொண்டுவந்தனர்.
இதற்கிடையே, இன்று வெளியிடப்பட்ட புதிய குடிமக்கள் பதிவேட்டிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. கார்கில் போரில் நாட்டுக்காக போராடிய ஒருவரின் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாதது தற்போது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.