மஹாராஷ்ட்ரா மாநிலம் நாலசோபரா நகரத்தின் நிர்மல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபத் நாயக். 80 வயதான இவர் ரைஸ் மில் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், இவர் ஒரு இதய நோயாளியாவர். இந்தநிலையில், இவர் தனக்கு வந்த கரண்ட் பில்லை பார்த்து அதிர்ந்து போனார்.
கணபத் நாயக்கிற்கு வந்த கரண்ட் பில்லில் அவர், 80 கோடி ரூபாய் கட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பில்லை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவருக்கு, இரத்தக் கொதிப்பும் அதிகரித்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த மகாராஷ்ட்ரா மின்சார வாரியம், கரண்ட் பில்லில் தவறு நடந்திருப்பதாக தெரிவித்ததோடு, சரியான பில்லையும் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணபத் நாயக்கின் உடல்நிலை தேறிவருகிறது. இதுகுறித்து கணபத் நாயக்கின் பேரன், முதலில், அவர்கள் எங்களுக்கு முழு மாவட்ட பில்லையும் அனுப்பிவிட்டதாக நினைத்தேன். நாங்கள் மீண்டும் அதனைச் சரிபார்த்தோம். அது எங்கள் பில்தான் எனத் தெரியவந்தது. மின்சார வாரியம் ஊரடங்கு காலத்திற்கான பாக்கியை வசூலிக்கத் தொடங்கியிருப்பதால், நாங்கள் பயந்துவிட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.