நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரையாற்றிய போது, “இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்திரா காந்தி போன்ற வலுவான பெண்களை இந்த நாடு பெற்றுள்ளது” என்று சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஜெயலலிதா, ஜெயலலிதா” என்று குரல் எழுப்பினார்.
அமித்ஷாவின் அந்த குரலை உணர்ந்து சட்டென்று பதிலளித்த கனிமொழி, “ஜெயலலிதா வலுவான தலைவர் என்பதை குறிப்பிடுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. அதேபோல, மாயாவதி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மறைந்த பாஜக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் வலுவான பெண் தலைவர்கள்” என்று அழுத்தமாக கனிமொழி சொல்ல, அதற்கு பதிலேதும் அமித்ஷா தரப்பில் இருந்து வரவில்லை.