மத்தியப்பிரதேச முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கமல்நாத் அறிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகிக் கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்தார் . அவருக்கு ஆதரவாக 22 ஆளும் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். பெங்களுருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த சூழலில், கமல்நாத் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெங்களூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை இந்த நாட்டு மக்கள் அறிவர். உண்மை கண்டிப்பாக வெளிவரும். மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். மேலும் எனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்கவுள்ளேன்" எனத் தெரிவித்தார்.