சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை கடந்த 25ஆம் தேதி கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவன் குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று (27-12-24) அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். அதன் பிறகு அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் யாரும் எதிர்பாராதது. அந்த மாணவி தனது ஆண் நண்பரோடு பேசிக் கொண்டிருந்த போது, தகாத நபர் விரும்பாத செயலை செய்துள்ளார். 25ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததற்கு பிறகு உரிய நடவடிக்கை எடுத்து குறுகிய நேரத்திலேயே அந்த நபரை கைது செய்யப்பட்டிருக்கிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் பெண்களுக்குரிய பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டியிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பார்கள், புகார் கொடுக்காமல் இருந்தாலும் அந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மாணவர்களை கண்காணித்து வருவார்கள். மாணவர்களின் நடவடிக்கையில் ஏதேனும் ஐயம் கொண்டால், நீங்களே அவர்களிடம் பேசுங்கள் என்று அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுங்கள் என்பதையெல்லாம் அந்த குழுவிற்கு வலியுறுத்திருக்கிறோம்.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் குறித்து அந்த குழுவிற்கு தகவல் வரவில்லை என்று எங்களுக்கு கிடைத்த சங்கடமான செய்தி. காவல்துறைக்கு புகார் மனு சென்ற பிறகு, பல்கலைக்கழகம் அதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறது. துறையின் அமைச்சர் என்ற முறையில், நானும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன். இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும். இதை அரசியலாக்கி ஆதாயம் தேட வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. கைதான ஞானசேகரனின் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்து இருக்கிறார். ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி வந்து செல்வார் என கூறப்படுகிறது” என்று கூறினார்.