Skip to main content

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கமல்நாத் மனு...

Published on 31/10/2020 | Edited on 31/10/2020

 

 Kamal Nath approaches Supreme Court in star campaigner issue

 

இடைத்தேர்தலுக்கான தனது நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதனைத்தொடர்ந்து, கமல்நாத்தை நட்சத்திரப் பேச்சாளர் என்ற நிலையிலிருந்து நீக்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். இந்தச் சூழலில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கமல்நாத், "நட்சத்திரப் பிரச்சாரகர் என்பது ஒரு பதவியோ அந்தஸ்தோ அல்ல. தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பற்றி நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை, நவம்பர் 10க்கு பிறகு எனது கருத்தைத் தெரிவிப்பேன். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அவர்களுக்கு எல்லாம் தெரியும்" எனத் தெரிவித்தார். இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான தனது நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை ரத்து செய்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து கமல்நாத் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்