ஒடிசா மாநிலம், நுவாபாடா மாவட்டம் போர்திபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் மஜி (50). இவர் , பலருக்கும் சூனியம் வைத்து வருவதாக அக்கிராமத்தினர் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் கூட்டம் ஒன்றை நடத்தி, அதில் மஜியிடம் சூனியம் வைத்ததாக கூறி பல கேள்விகள் எழுப்பி அதனை விடுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த கிராமத்தினர் வைத்த குற்றச்சாட்டுகளை, மஜி முழுவதுமாக மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த கிராமத்தினர், மஜியை சரிமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். மேலும், அவரை வைக்கோல் கயிற்றால் கட்டி அவருக்கு தீ வைத்துள்ளனர். இதனால், மஜியின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீ வைத்ததால், வலி தாங்க முடியாமல் அலறியடித்து ஒவ்வொரு வீட்டுக்கும் ஓடி வந்துள்ளார். ஆனால், துர்திஷ்டவசமாக அந்த கிராமத்தில் உள்ள யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை. ஒரு கட்டத்தில், வலி தாங்க முடியாத மஜி, அந்த ஊரில் உள்ள குளத்தில் விழுந்துள்ளார்.
தீ காயங்களோடு குளத்தில் விழுந்த மஜியை, அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சூனியம் வைத்ததாகக் கூறி, கிராம மக்கள் 50 வயது நபருக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.