ஆந்திர மாநிலத்தின் தலைநகரான குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரி பகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீடு தொழில் அதிபரின் வீடு ஆகும். முந்தைய மாநில அரசு தொழில் அதிபரின் இல்லத்தை குத்தகைக்கு எடுத்து முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றியது. பிறகு இந்த வீட்டிற்கு அருகில் " பிரஜா வேதிகா" என்ற பெயரில் அரசு சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் மாநில அமைச்சரவை கூட்டங்கள், அதிகாரிகள் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தங்கியிருக்கும் வீட்டையும், பிரஜா வேதிகா கூட்ட அரங்கை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து முதல்வர் ஜெகன் இது வரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மங்களகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்த போது சந்திரபாபு நாயுடு வசிக்கும் வீடு நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் விதியை மீறி கட்டப்பட்டுள்ளது. அது சட்ட விரோத கட்டிடம் ஆகும். அந்த கட்டிடத்தில் இருந்து சந்திரபாபு நாயுடுவை வெளியேற்ற தேவையான நடவடிக்கைளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது. அந்த பகுதியில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும் என தெரிவித்தார்.