இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்துவரும் நிலையில், அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஆண்டு குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது.
மேலும், அண்மையில் பிரஷாந்த் கிஷோரும் ராகுல் காந்தியும் சந்தித்தபோது சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் உடனிருந்ததாகவும், அப்போது சரத் பவாரை குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில், இந்த தகவல்களை சரத் பவார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "குடியரசுத் தலைவர் தேர்தலில் நான் வேட்பாளர் என்பது முற்றிலும் தவறானது. ஒரு கட்சிக்கு (பாஜகவிற்கு) 300 எம்.பிக்கள் இருக்கும்போது தேர்தலின் முடிவு என்ன என்பது எனக்குத் தெரியும்" என கூறியுள்ளார். தொடர்ந்து பிரசாந்த் கிஷோருடனான சந்திப்பு குறித்து பதிலளித்த அவர், "பிரசாந்த் கிஷோர் என்னை இரண்டுமுறை சந்தித்தார். ஆனால் நாங்கள் அவரது நிறுவனத்தை பற்றி மட்டுமே பேசினோம். 2024 தேர்தலில் தலைமை வகிப்பது பற்றியோ, குடியரசுத் தலைவர் தேர்தலைப் பற்றியோ எந்த உரையாடலும் நடைபெறவில்லை" என கூறியுள்ளார்.
மேலும் சரத் பவார், "2024 தேர்தல் பற்றியோ மஹாராஷ்ட்ரா மணிலா தேர்தல் பற்றியோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்கு நீண்டகாலம் இருக்கிறது. அரசியல் சூழ்நிலை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும். நான் 2024 தேர்தலில் எந்த தலைமைப் பொறுப்பையும் வகிக்கப்போவதில்லை" எனவும் தெரிவித்துள்ளார்.