கடந்த நவம்பர் 7ஆம் தேதி கமல் சினிமாவில் நடிக்க தொடங்கி அறுபது வருடங்கள் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் விதமாக ‘உங்கள் நான்’ என்றொரு நிகழ்ச்சியும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, கமல்ஹாசனை பாராட்டினர். இளையராஜாவின் இசை கச்சேரியும் நடைபெற்றது.
இந்நிலையில் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஒடிசா மாநிலத்திலுள்ள செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சினிமா, கலாசாரம் மற்றும் கலை உள்ளிட்டவற்றில் கமலின் சேவையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) செஞ்சுரியன் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார். கலம்ஹாசனும் ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.