மருத்துவர் கஃபீல்கானின் தம்பி மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தன. அப்போது தன்னால் முடிந்தவரை சிலிண்டர்களை ஏற்பாடு செய்த குழந்தைகளைக் காப்பாற்றியவர் மருத்துவர் கஃபீல்கான். ஆனால், அவர்மீது குற்றம்சாட்டப்பட்டு பிணையில் வெளிவர முடியாதவாறு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார். தான் பலிகிடா ஆக்கப்பட்டதாக தெரிவித்திருந்த மருத்துவர் கஃபீல்கான், பல்வேறு முயற்சிக்குப் பிறகு ஏப்ரல் 25ஆம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், கோரக்பூரில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மருத்துவர் கஃபீல்கானின் தம்பி கசீப் ஜமீல், மர்மநபர்கள் சிலரால் சுடப்பட்டார். கழுத்து, கைகளில் குண்டு பாய்ந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் கசீப். முன்னதாக மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் கசீப்புக்கு சிகிச்சை அளிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து, இரண்டு அரசு மருத்துவமனைகளுக்கு அலைக்கழித்துள்ளனர். இதனால், கணிசமான நேரம் வீணானதாக மருத்துவர் கஃபீல்கான் குற்றம்சாட்டியுள்ளார்.
The Dr. Kafeel who saved children when Yogi Aadityanath gov had no money to pay for oxygen. He was put behind bars. Now his brother is shot at. Thank you so much Modi ji for what your ' acche din ' are offering us -hate speeches, violence, bloodshed and bullets. https://t.co/UjLQ3rd7gK
— Jignesh Mevani (@jigneshmevani80) June 10, 2018
இதுகுறித்து குஜராத் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, ‘யோகி அரசு ஆக்சிஜன் சிலிண்டருக்கு பணம் செலுத்தாத காரணத்தால் செத்துக் கொண்டிருந்த குழந்தைகளை மருத்துவர் கஃபீல்கான் காப்பாற்றினார். அவரை சிறையில் தள்ளினீர்கள். இன்று அவரது தம்பி சுடப்பட்டுள்ளார். நீங்கள் எங்களுக்கு தந்து கொண்டிருக்கும் வெறுப்பான பேச்சு, வன்முறை மற்றும் துப்பாக்கி குண்டுகளால் நிறைந்த நல்ல நாட்களுக்கு நன்றி மோடி’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.