அரசு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படும்படி நிர்பந்தம் செய்வதாகவும், உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவந்தால், அரசு வீடுகளை காலி செய்யும்படியும், மூன்று மூத்த பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதாக காஷ்மீர் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக காஷ்மீர் பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அரசின் தடைகளை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீரில் மொபைல் போன்களுக்கும், லேண்ட்லைன் போன்களுக்கும், இணைய வசதிக்கும் கடந்த ஒரு மாதமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள், பத்திரிகையாளர்கள் உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவர முடியாமல் தடுக்கின்றன என்று நிர்வாகக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்தத் தடைகளை நீக்கி, பத்திரிகைகள், ஊடகங்கள், பத்திரிகையாளர்களுக்கு மொபைல் போன் வசதி, இணைய வசதி செய்து தரும்படி பலமுறை அரசு அதிகாரிகளிடம் பிரஸ் கிளப் வலியுறுத்தி இருக்கிறது. ஆனால், இதுநாள்வரை பத்திரிகையாளர்களுக்கு இந்த வசதிகள் செய்து தரப்படவில்லை.
இதுவரை செய்தியாளர்கள் செய்திகளைத் தருவதற்கு 5 கம்ப்யூட்டர்களும், மிக மெதுவான இணைய தொடர்பு வசதியும் மட்டுமே மத்திய அரசு செய்து கொடுத்திருக்கிறது. நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் தங்களுடைய செய்திகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தருவதற்காக நீண்ட கியூவில் காத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி பத்திரிகையாளர்களை அரசு மிரட்டுகிறது. அய்ஜஸ் ஹுசைன், ஃபயஸ் புகாரி, நஸிர் மசூதி ஆகிய மூன்று மூத்த பத்திரிகையளர்களை அரசு வீடுகளில் இருந்து காலி செய்யும்படி அரசு நிர்பந்திக்கிறது என்று பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது. இது பத்திரிகைகளை மறைமுகமாக சித்திரவதை செய்வதாகும் என்றும் அது கூறியுள்ளது.