இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழு அளவில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டாலும், அதன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை.
இதற்கிடையே அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி இம்மாத தொடக்கத்தில் விண்ணப்பித்தது. அதன்தொடர்ச்சியாக, கடந்த ஏழாம் தேதி ஜான்சன் & ஜான்சன் நிறுவன தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசியை 12 - 17 வயதுக்குட்பட்டவர்கள் மீது பரிசோதிக்க மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.