ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார்.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே, மொத்தம் 14 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், மே 13, மே 20, மே 25 மற்றும் ஜுன் 1 என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜார்க்கண்ட் அமைச்சருமான ஆலம்கீர் ஆலமை, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக மேம்பாட்டு திட்டத்தில், அமைச்சர் ஆலம்கீர் ஆலம் பல்வேறு முறைகேடுகள் நடத்தியதாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தப் பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் ஆலம்கீர் ஆலமின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சீவ் லாலின் வீட்டு உதவியாளரான ஜஹாங்கீர் ஆலமின் குடியிருப்பில் சோதனைகள் நடத்தப்பட்டன.
அந்தச் சோதனையில், ரூ.37 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, அமைச்சர் ஆலம்கீர் ஆலம் மற்றும் சஞ்சீவ் லாலை உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று (15-05-24) அவர்கள் அமலாக்கத்துறை முன் ஆஜராகினர். அதன் பின்னர், அவர்களிடம் நடத்திய பலமணி நேர விசாரணைக்கு பிறகு, அமைச்சர் ஆலம்கீர் ஆலம் மற்றும் சஞ்சீவ் லாலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.