மகாராஸ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதேபோல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
அதே வேளையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற மெகாகூட்டணியை அமைத்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றன. இருப்பினும், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அஜித் பவார் நேற்று (25-12-23) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், 2024ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கட்சிகளின் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாரும் இல்லை. பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முடிவு ஒன்று அல்லது இரண்டு விஷயங்களில் மட்டும் எடுக்கப்படாது. அது பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. எதிர்கட்சிகள் எந்த மாதிரியான பிரச்சாரத்தில் வேண்டுமானாலும் ஈடுபடலாம். ஆனால், நான் கூறியது மட்டுமே நடக்கப் போகிறது.
பிரதமர் மோடியைப் போன்று நாட்டு நலனில் தீவிர அக்கறை செலுத்தும் தலைவர் யார் உள்ளார்கள்?. பிரதமர் மோடியால் தான் இந்தியா வலுவான நாடு என்று சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியுமா?. பிரதமர் பதவியை மோடி ஏற்ற பிறகுதான் இந்தியாவுக்கு சர்வதேச அளவில் உரிய மரியாதையும், கவுரவமும் கிடைக்கிறது என்பதே உண்மை. நாட்டு மக்களும் மோடியின் தலைமை மீது வலுவான நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு, சமீபத்தில் நடந்து முடிந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளே சாட்சி” என்று கூறினார்.