Skip to main content

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது?

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Jharkhand Chief Minister Hemant Soran arrested?

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பெரும் எதிர்பார்ப்புடன் ஆட்சியில் அமர்ந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ஜனவரி 20 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் 7 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராகப் பதவியேற்க இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.