புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வந்தது. இதில் சுமார் 350 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் இந்த ஆலை சுமார் 3 மாத காலமாக இயங்காமல் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி அரசு கூட்டுறவு நூற்பாலை மீது கவனம் செலுத்தி தனியார் பங்களிப்புடன் இயங்காமல், அரசே ஆலையை ஏற்று நடத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதுச்சேரி அண்ணா சிலை அருகே யாசகம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராகவும், கூட்டுறவு நூற்பாலையை அரசு இயக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ஆத்திரமடைந்த ஊழியர்கள் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து தொழிலாளர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதனால் காவல்துறைக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென நகரின் முக்கிய சாலையில் ஏற்பட்ட சாலை மறியலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.