பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமெளலி, பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார். அவரது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
தற்போது இந்தப் படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜப்பானில் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான ஸ்பெஷல் ஸ்கிரீனிங் ஷோ கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதற்காக ராஜமெளலி, தனது மகன் கார்த்திகேயா, மனைவி மற்றும் தனது குழுவுடன் ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர் தனது மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, ஆர்.ஆர்.ஆர் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கிற்கு பிறகு, 83 வயது மூதாட்டி ஒருவர், ராஜமெளலிக்கு 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ராஜமெளலி தனது எக்ஸ் தளத்தில், “ஜப்பான் நாட்டு மக்கள், ஓரிகமி கிரேன்களை உருவாக்கி, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் மற்றும் ஆரோக்கியத்திற்காக பரிசளிக்கிறார்கள். ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்த இந்த 83 வயது மூதாட்டி, ஓரிகமி கிரேனை பரிசாக அளித்து எங்களை ஆசிர்வதித்தார். இது விலைமதிப்பில்லாத பரிசு” என்று பதிவிட்டு புகைப்படத்தை வெளியிட்டார்.
இது தொடர்பான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அதன் பின்னர், இந்த நிகழ்வை முடித்து விட்டு ஜப்பானில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வர திட்டமிட்டுள்ளார் ராஜமெளலி. இதற்காக அங்கேயே தங்கியுள்ளார். இந்நிலையில், ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் கடந்த 21 ஆம் தேதி காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மத்திய டோக்கியோவிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் வீடுகள், பொது இடங்களில் உள்ள கட்டிடங்கள் உள்ளிட்டவை குலுங்கியுள்ளன. இதன் காரணமாக பீதியடைந்த ஜப்பான் மக்கள், வீடுகளிலிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். அதே சமயம் இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரின் மகனும் சிக்கியுள்ளனர்.
இது தொடர்பாக ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தாங்கள் அனைவரும் உணர்ந்ததாகவும், அப்பாவுடன் 28 வது மாடியில் இருந்தபோது, என்ன செய்வதன்று தெரியாமல் தவித்ததாகவும் பகிர்ந்துள்ளார். இது குறித்து இயக்குநர் ராஜமெளலியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28 வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நான் பயத்தில் இருந்தேன். ஆனால் சுற்றியிருந்த அனைத்து ஜப்பானியர்களும், மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை” என்று கூறி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரின் உறவினர்களும், ரசிகர்களும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.