அடுத்தாண்டு இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ள கூட்டணியை உருவாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கூட்டணியினர் பீகார், பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதேபோல், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, புதிய தமிழகம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா என 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தித் தங்கள் ஆதரவைப் பெருக்கிக் கொண்டனர்.
இதனிடையே, அதிமுக முன்னாள் தலைவர்கள் பற்றிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த அது கூட்டணி முறிவு வரைச் சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அ.தி.மு.க தலைமை அறிவிப்பு வெளியிட்டது. அதோடு, வருகிற நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல், அடுத்து நடக்கவிருக்கிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து புதிய பாரதம் கட்சியும் விலகுவதாக அண்மையில் அறிவித்தது. இது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக ஏற்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகப் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கூறியிருந்ததாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இது குறித்து பவன் கல்யாண், “ஆந்திராவின் வளர்ச்சிக்கும் சிறந்த ஆட்சிக்கும் தெலுங்கு தேசம் தேவைப்படுகிறது. ஆனால், இன்று தெலுங்கு தேசம் கட்சி இக்கட்டான சூழலில் உள்ளது. நாம் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த சூழலில், ஜனசேனா இளைஞர்களின் ஆதரவு தெலுங்கு தேசத்துக்கு தேவைப்படுகிறது. தெலுங்கு தேசமும், ஜனசேனா கட்சியும் ஒன்றிணைந்தால் மாநிலத்தில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி மூழ்கிவிடும்” என்று கூறியிருந்தார். இந்த செய்தி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பவன் கல்யாண் விலகியதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் ஜனசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொலிஷெட்டி சத்யநாராயணா, பரவி வரும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும், தெலுங்கு தேசம் கட்சி பலவீனமாக இருப்பதால் ஆதரவு அளிக்க வேண்டும் என்றுதான் பவன் கல்யாண் கூறியிருந்தார். அதற்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்று அர்த்தமில்லை. அதனால், நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.