மேகதாது அணை குறித்து தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு எழுதியிருந்த கடிதத்தை 'பொலிட்டிகள் ஸ்டண்ட்' என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்திருந்தார்.நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து தெரிவிக்கையில், ''நானும் பத்திரிகைகளில் பார்த்தேன் முதல்வரின் கடிதத்தை 'பொலிட்டிகள் ஸ்டண்ட்' என பொம்மை விமர்சித்துள்ளார். ஒரு மாநில முதல்வர் எழுதிய கடிதத்தை மற்றொரு மாநிலத்தை சேர்ந்த முதல்வர் இவ்வாறு கூறுவது அவருக்கு பெருமை தரக்கூடியது அல்ல. பொம்மையின் தந்தை பெரிய ஜனநாயகவாதி. அவருடைய மகன் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது வருத்தத்திற்குரியது.
வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கர்நாடக மேகதாதுவில் அணைகட்ட முயற்சிப்பது சட்டத்திற்கு புறம்பானது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எந்த மாநிலமும் பன்மாநில நதியின் நீருக்கு உரிமைகோர முடியாது. 4.75 டிஎம்சி தேவைக்காக 67.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல. அணை குறித்த விவாதங்களில் தமிழகம் பங்கேற்கவில்லை என கர்நாடக முதல்வர் கூறியுள்ளது மிகவும் விந்தையாக உள்ளது. தமிழகம் பங்கேற்காதது குறித்து கர்நாடக முதல்வருக்கு அதிகாரிகள் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை போல. மேகதாது விவகாரத்தை அரசியலாக்கும் எண்ணமோ, அவசியமோ தமிழக அரசுக்கு இல்லை. இது தமிழக விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதார பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்வுகாணும் வரை அணை கட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்'' எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, 'மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கிடைக்கும். மேகதாது அணை திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இதுவரை தடை விதிக்கவில்லை காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க கர்நாடக கோரிக்கை வைக்கும். மேகதாதுவில் அணை கட்ட கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கை நியாயமற்றது'' எனத் தெரிவித்துள்ளார்.