இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று (05-02-24) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, '' தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. ஆட்சிக்கு வர அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்துங்கள். காங்கிரசின் செயல்பாடுகளால் அக்கட்சிக்கும், பிற கட்சிகளுக்கும், நாட்டிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் திறமையை காங்கிரஸ் வீணடிக்கிறது. சிறுபான்மையினர் என சமூகத்தை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்துகின்றனர். ஒரு முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் காங்கிரசை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கோட்டையில் இருந்து முன்னாள் பிரதமர் நேரு பேசியதை இங்கு படிக்கிறேன். பொதுவாக இந்தியர்களுக்கு கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை. ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்களை போல் இங்குள்ளவர்கள் உழைக்கவில்லை என்று நேரு கூறியிருந்தார். அதாவது, இந்தியர்கள் சோம்பேறியானவர்கள், புத்திசாலித்தனம் குறைவாக உள்ளவர்கள் என்று நேரு நினைத்தார் என்பதே இதற்கு அர்த்தம். இந்திரா காந்தியின் சிந்தனையும் கூட நேருவிலிருந்து வேறுபட்டதல்ல.
இன்று காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை பார்க்கும் போது, இந்திரா காந்தியால் நாட்டு மக்களை சரியாக மதிப்பிட முடியவில்லை. ஆனால், காங்கிரஸை முற்றிலும் சரியாக மதிப்பிட்டார் என்று தெரிகிறது. குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் பிரச்சனைகள் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவதில்லை. வந்தே பாரத், புதிய நாடாளுமன்ற கட்டடம், மேக் இன் இந்தியா உள்ளிட்டவை நாட்டின் சாதனைகள். அரசின் அத்தனை நடவடிக்கைகளையும் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது” என்று கூறினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் மோடி நேற்று மக்களவையில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். இன்று மாநிலங்களவையில் மீண்டும் ஒரு நிகழ்ச்சியை நடத்துவார் என்பதில் சந்தேகமில்லை.
அவர் ஆழ்ந்த பாதுகாப்பின்மை மற்றும் சிக்கல்களால் பாதிக்கப்படுவதால் நேருவை அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் தாக்குகிறார். வாஜ்பாயும், அத்வானியும் இதை செய்யவில்லை. ஆனால், மோடி தான் ஒரு புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு இப்படி பேசுகிறார். ஆனால், உண்மையில் அவர் வகிக்கும் பதவியை இழிவுபடுத்துகிறார். பிரதமர் மோடி மக்களவையில் பேசிய உரையே கடைசி உரையாக இருக்கும் என்று இந்திய மக்கள், குறிப்பாக இளைஞர்கள் முடிவு செய்துவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.