இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், பாஜக எம்.பி பிரிஜ்பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும், அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண், சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23ம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு இந்திய விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது குறித்து மல்யுத்த வீராங்கனைகள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்த போது, உடனடியாக வீராங்கனைகளின் புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தது. இதையடுத்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கு 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீரர் வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "பிரதமரிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் மல்யுத்த வீரர்களைப் பற்றி அவர் கவலைப்படுகிறார் என்றால் ஏன் அவர்களுடன் பேசவில்லை அல்லது அவர்களை ஏன் சந்திக்கவில்லை. இந்த தேசமே அவர்களுடன் துணை நிற்கிறது. மல்யுத்த வீரர்கள் இந்த பிரச்சினைக்கு எதிராக குரல் எழுப்பியதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. அதை ஏன் யாருக்கும் காட்டவில்லை. இதே மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை வெல்லும் போது நாம் அனைவரும் ட்வீட் செய்தோம், பெருமைப்பட்டோம். ஆனால் இன்று அவர்கள் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை. இந்த மல்யுத்தப் பெண்கள் அனைவரும் பல்வேறு தடைகளை தாண்டி இந்த நிலைக்கு வந்துள்ளனர். பிரிஜ்பூஷண் சரண் சிங்கை அரசு ஏன் காப்பாற்றுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை " என்று கூறியுள்ளார்.