பல விதமான நூதன முறைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க சிசிடிவி காட்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பிடிபட்டால் சிக்காமல் இருக்க உடலில் எண்ணெய்யை பூசிக்கொண்டு சில மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அண்மையில் மதுரையில் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் ஆந்திராவில் திருப்பதி பகுதியில் ஜட்டியுடன் உலாவும் சில மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜட்டி அணிந்தபடி உலாவும் சில நபர்கள் திருட்டில் ஈடுபடுவதாக போலீசருக்கு பல இடங்களில் இருந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்ததில், ஜட்டியுடன் சில நபர்கள் தங்கள் உடலில் டார்ச் லைட்டை மாட்டியபடி நோட்டமிடுவது தெரியவந்தது.
அண்மையில் கார் ஷோரூமில் இந்த ஜட்டி திருட்டு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜட்டியுடன் சுற்றித் திரியும் அந்த நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு இருப்பதால் அடையாளம் காண்பது போலீசாருக்கு சிரமத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக திருப்பதியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளைக் குறிவைத்து இவர்கள் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.