சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் 'இரும்பின் தொன்மை' நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைத்தல் நிகழ்வு நாளை (23.01.2025) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியத் துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிகழ்வு 23.01.2025 அன்று காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடை பெற உள்ளது. அனைவரும் வருக” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த பதிவைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள். மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.