கரோனா பரவல் காரணமாக இந்தியா, கடந்த ஆண்டு சர்வதேச வர்த்தக விமான போக்குவரத்தை நிறுத்தியது. அதேசமயம் இந்தியாவிற்கும் சில குறிப்பிட்ட நாடுகளுக்கும் இடையே மட்டும் விமான சேவை நடைபெற்றுவருகிறது. இந்தச் சூழலில், வரும் டிசம்பர் 15ஆம் தேதிமுதல் மீண்டும் முன்புபோல் சர்வதேச வர்த்தக விமான போக்குவரத்து சேவை தொடங்க இந்தியா திட்டமிட்டது.
ஆனால், தற்போது ஒமிக்ரான் என்னும் புதிய கரோனா வகை பரவிவருவதால், மீண்டும் பழையபடி வர்த்தக விமான போக்குவரத்தைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அண்மையில் கரோனா நிலை குறித்து ஆய்வுசெய்த பிரதமர் மோடியும், சர்வதேச பயண கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான திட்டங்களை மறு ஆய்வுசெய்ய வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில், சர்வதேச வர்த்தக விமானப் போக்குவரத்து தொடங்குவதை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரின் அலுவலகம், அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனையுடன், கவலைக்குரிய புதிய கரோனா திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய சூழ்நிலையைக் கவனித்துவருவதாக கூறியுள்ளதோடு சர்வதேச வர்த்தக விமானப் போக்குவரத்து தொடங்கும் தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.