1940ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, லாகூரில் நடந்த மாநாட்டில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்தது. முஸ்லிம் மக்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள், பாகிஸ்தானில் தேசிய தினமாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நேற்று (23.03.2021) பாகிஸ்தான், தனது தேசிய தினத்தைக் கொண்டாடியது. பாகிஸ்தானின் தேசிய தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பாகிஸ்தான் தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தான் மக்களோடு இந்தியா நல்லுறவை விரும்புவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது கடிதத்தில், "ஒரு அண்டை நாடாக பாகிஸ்தான் மக்களோடு நல்லுறவை விரும்புகிறது இந்தியா. இதற்கு பயங்கரவாதமும், வன்மமும் இல்லாத நம்பிக்கையான சூழல் தவிர்க்க இயலாதது" என தெரிவித்துள்ளார். மேலும், “கரோனா பெருந்தொற்று சவால்களைக் கையாளுவதற்கு உங்களுக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்” எனவும் பிரதமர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தக் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.