இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (21/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750- லிருந்து 1,12,359 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303- லிருந்து 3,435 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298- லிருந்து 45,300 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 63,624 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கரோனா பரிசோதனை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மே 21- ஆம் தேதி காலை 09.00 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 26,15,920 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 1,03,532 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும் 3,60,068 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.