![bajrang punia is back on the field haryana farmers issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/blX5gFdLagANqRHAnqje4OHrs2v3cZUgQYbpqWjTiak/1686565905/sites/default/files/inline-images/bajirang-art.jpg)
சமீபத்தில் 2023-2024 ஆம் ஆண்டில் வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் சூரியகாந்தி விதைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது டிராக்டர்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 'சூரியகாந்தி விதைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்நிலையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், "விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாங்களும் கூட விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். சாலையில் நிற்கும் விவசாயிகளுடன் நாங்கள் துணை நிற்போம். விவசாயிகளின் முந்தைய போராட்டத்தின் போதும் விவசாயிகளை ஆதரித்தோம். அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம்" என தெரிவித்தார்.