நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு எதிராக புதிய தூக்கிலிடும் உத்தரவு பிறப்பிக்கக் கோரி அரசு மற்றும் நிர்பயாவின் பெற்றோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நிர்பயாவின் தாயார் கண்ணீர் விட்டு அழுதது நாடு முழுதும் பலரையும் உலுக்கியுள்ளது.
நீதிமன்றத்தில் பேசிய நிர்பயாவின் தாய், "எனக்கான உரிமை என்ன? நான் இப்போதும் கைகளை கட்டிக்கொண்டு நிற்கிறேன். தயவுசெய்து மரண தண்டனைக்கான உத்தரவை வழங்குங்கள். நானும் மனிதன்தான். 7 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நான் இப்போது நம்பிக்கையையும் இழந்து நிற்கிறேன். குற்றவாளிகளின் தாமதம் செய்யும் யுக்திகளை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும்.
என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த குற்றவாளிகள் வேண்டுமென்றே தாமதமாக்க தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இதை ஏன் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை" என தெரிவித்தார். இந்நிலையில் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், குற்றவாளி பவனுக்கு புதிய வழக்கறிஞர் ஒருவரையும் நியமனம் செய்ய அனுமதியளித்துள்ளது.