அடுத்தாண்டு இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்டுள்ள கூட்டணியை உருவாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கூட்டணியினர் பீகார், பெங்களூரு, மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
அதேபோல், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக, பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிகள் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சவாலாக இருக்கும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்த ஒரு தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. பிரதமர் மோடி கட்சியை நன்றாக வழிநடத்தி செல்கிறார். பாஜக கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஒவ்வொரு தேர்தலையும் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றனர். மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க பாஜக செயல்பட்டு வருகிறது” என்றார்.