
இந்திய விமானப்படையின் தலைமை பொறியாளர், மர்ம நபரால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையின் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தவர் எஸ்.என்.மிஸ்ரா (50). இவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள உயர்பாதுகாப்பு கொண்ட விமானப்படை காலணியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், மிஸ்ரா இன்று அதிகாலை நேரத்தில் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஜன்னல் வழியாக ஒரு அடையாளம் தெரியாத நபர் மிஸ்ராவை அழைத்துள்ளார். அதனை கேட்ட மிஸ்ராவும் ஜன்னலைத் திறந்தவுடன் அந்த நபர், மிஸ்ரா மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.
இதில் படுகாயமடைந்த மிஸ்ராவை, அவரது குடும்பத்தினர் உடனடியாக மீட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, விமானப் படை அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தாக்குதல் நடத்தியவரை தீவிரமாக தேடி வருகின்றனர். உயர் பாதுகாப்பு கொண்ட ஒரு காலணியில், மூத்த அதிகாரி ஒருவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.