புதுச்சேரி மாநில அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் அண்ணா சிலை அருகிலிருந்து சட்டமன்றம் நோக்கிக் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.
சம்பா கோவில் அருகில் பேரணி வந்தபோது போலீசார் தடுப்புகளை அமைத்துத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பா.ம.கவினர் காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளைத் தூக்கி எறிந்து, காவல்துறையினரைத் தள்ளிவிட்டு சட்டமன்றத்தை நோக்கி அனைவரும் வேகமாக ஓடினர். இதனை காவல்துறையினர் தொடர்ந்து தடுக்க முயற்சி செய்தும் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு அதன் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து பா.ம.கவினரை போலீசார் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து பா.ம.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் பா.ம.கவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.