விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இதில் பீகாரின் ரூபாலி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கலாதர் பிரசாத் மண்டல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் பீமா பாரதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், லோக் ஜன சக்தி சார்பில் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த சங்கர் சிங், தற்போது அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.
இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று பெற்றியிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகள் பெற்று 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால், பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.