Skip to main content

பிபிசி அலுவலகத்தில் வருமான வரிச் சோதனை 

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

Income tax raid at BBC office delhi

 

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசு திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டிருந்தது. 

 

மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும் இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. 'இந்தியா: மோடிக்கான கேள்வி' (India: The Modi Question) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஆவணப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சனம் செய்து வந்தனர். 

 

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்தது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் டெல்லியில் உள்ள பிபிசி ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு ஊழியர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றன. பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படத்தை வெளியிட்டதன் காரணமாகத்தான் இந்த சோதனை நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்