![incident in puducherry... police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/PgIGYs04BRqv2q-qOw1xDWBOzrExPa2dQGhsk6HxElQ/1619017828/sites/default/files/inline-images/download_105.jpg)
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள சந்தை புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமன் - ராஜசேகரி தம்பதியினருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ராமன் குவைத்தில் பணியாற்றி வருகின்றார். இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
![incident in puducherry... police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/s5A11a2khgos7hHILwzyDkMe9Hj-f-GMwj1kYRImvSk/1619018133/sites/default/files/inline-images/87080.jpg)
இந்நிலையில் வில்லியனூர் அருகே பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்கு மூட்டை ஏதோ உள்ளதாக நேற்று இரவு வில்லியனூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்ததில் இளம் பெண்ணின் பிணம் இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் காணாமல் போன மாணவி ராஜஸ்ரீ தான் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் சுடுகாட்டில் கட்டி பிணமாக வீசப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
![incident in puducherry... police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/LX_Ymbfkf-f1XFn_qT2XWqTCq2a9PaRx2H3CLfeJVFk/1619017986/sites/default/files/inline-images/ytuituyt.jpg)
தொடர்ந்து போலீசார் விசாரணையில், ராஜஸ்ரீ வில்லியனூர் பொறையூர் பேட் பகுதியில் உள்ள வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவியை அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும் வந்த தகவலை அடுத்து போலீசார் பிரதீஸ் என்கிற வாலிபரை தேடி வந்தனர். அவர் இன்று காலை காவல்நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் "ராஜஸ்ரீ பிரதீசை காதலித்த நிலையில் வேறு ஒரு வாலிபருடன் அடிக்கடி ஃபோனில் பேசுவதும், வெளியே சுற்றுவதும் அறிந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று தனியாக இருவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரதீஷ் தனது சகோதரன் தேவாவுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை அடித்துக் கொலை செய்து பின்பு சாக்கு மூட்டையில் கட்டி வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பிரதீஸ் சரணடைந்த நிலையில் தேவாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.