தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மாவட்ட பா.ஜ.க துணை தலைவர் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக வெற்றி பெற அரசியல் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த மாவட்ட பா.ஜ.க துணை தலைவர் மாவோயிஸ்டுகளால் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவராக ரத்தன் துபே என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் இன்று (04-11-23) கவுஷல்நார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது மாவோயிஸ்டுகள் ரத்தன் துபே மீது நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பா.ஜ.க நிர்வாகி மாவோயிஸ்டுகளால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.