குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், நேற்று உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிரியங்கா காந்தியிடம் போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதுகுறித்து அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ள கருத்து தெப்போது சர்ச்சையாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான 76 வயது உடைய தாராபுரி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சந்திக்க பிரியங்கா காந்தி உ.பி சென்றார். ஆனால் அவர் சென்ற வாகனத்தை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஏறிய பிரியங்கா காந்தி அவரை சந்திக்க சென்றார். கடுமையான போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் பிரியங்கா காந்தி அவரை சந்தித்தார். இந்நிலையில், உ.பி போலீசார் தனது கழுத்தை பிடித்து தள்ளினார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து தகுந்த விசாரனை நடத்தவும் அவர் உத்தரப்பிரதேச ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக அமைச்சர் கிஷன் ரெட்டி, "சோனியா காந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், பாதுகாப்பு வளையத்தை கடந்து சென்று மக்களை பார்வையிடுவது வழக்கம். இப்படிப்பட்டவர்களுக்கு தங்கள் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்ப உரிமை இல்லை" என தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.