உத்தரப் பிரதேச மாநிலம், கோராக்பூர் பகுதியைச் சேர்ந்தார் ராம் மிலன். இவரது மனைவி ஆர்த்தி வர்மா. இந்த தம்பதிக்கு 11ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவர் இருக்கிறார். ராம் மிலன், சென்னையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் பணிபுரிந்து வரும் ராம் மிலன், தனது மனைவியை கடந்த இரண்டு நாட்களாக தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், கடந்த 7ஆம் தேதி தனது மைத்துனரிடம் தகவல் கொடுத்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். ஆனால், அந்த வீடு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த ராம் மிலன், தனது சொந்த ஊரான கோராக்பூருக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது தனது மனைவி ஆர்த்தி உயிரிழந்த நிலையில் தரையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது மகனும் அங்கு இல்லாததை கண்டு அவர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், சிவன் கோவில் பக்கத்தில் இருந்த ராம் மிலனின் மகனை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தாயார் கீழே விழுந்து இறந்துவிட்டார் என்றும், பயத்தால் வீட்டை பூட்டிவிட்டு நான்கு நாட்களாக அலைந்ததாகவும் கூறினார். அதன் பிறகு, உயிரிழந்த ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிவில், சிறுவனின் கூற்றோடு ஒத்துப்போகவில்லை. வீட்டில், தனித்தனி இடங்களில் ரத்தக்கறைகள் இருந்தன. வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் வரவில்லை என்பதை சிசிடிவி கேமரா காட்சிகள் உறுதிப்படுத்தியது. மேலும் அறையில், ரூ.200, ரூ.500 போன்ற நோட்டுகளில் அதிகளவு பணம் இருந்துள்ளது. இப்படியாக, பல கோணங்களில் எதிரும் புதிருமாக தகவல் கிடைத்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுவடைந்தது. அதன் பிறகு, ராம் மிலனின் மகனிடம் போலீசார் பல மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், வாக்குவாதத்தின் போது தனது தாயை தான் தள்ளிவிட்டதாக அந்த சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கடந்த 3ஆம் தேதி காலை தனது மகனை பள்ளிக்குச் செல்லுமாறு ஆர்த்தி கூறியுள்ளார். ஆனால், அந்த சிறுவன் அதை மறுத்து தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். இதில் விரக்தியடைந்த ஆர்த்தி, தனது மகன் மீது தூக்கி எறிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் தனது தாயை கீழே தள்ளிவிட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த சிறுவனை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.