கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதில் ஒன்றாக தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இரட்டை இலைச் சின்னம் லஞ்சம் தொடர்பாகவும் 200 கோடி ரூபாய் மோசடி தொடர்பாகவும் கைது செய்யப்பட்ட சுகேஷ் என்பவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் சொகுசு வாழ்க்கையில் இருந்து வந்தார். இதற்காக அவர் டெல்லி அமைச்சர்களுக்கு பலகோடி கொடுத்தாக சுகேஷ் சந்திரசேகர் வாக்குமூலமும் அளித்தார். அதன் பிறகு திகார் சிறையில் இருந்து, தற்போது டெல்லி மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனிடையே ஆம் ஆத்மிக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் இடையே மோதல் போக்கு நிலவவே, ஆம் ஆத்மி மீதும், அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளர்க்க வேண்டும் என அதன் கட்சி நிர்வாகிகள், அதிலும் குறிப்பாக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பணம் கேட்டதாகவும், மாநிலங்களவை எம்.பி பதவி தருவதாகவும் கூறி பணம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்ப, “உண்மை வென்றுவிட்டது..” என்று கூறிய சுகேஷ் சந்திரசேகர், “அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால்தான், விரைவில் சிக்குவார்” என்றார். இது தற்போது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.