விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் விருதுநகரில் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, “தளபதிக்கு நாட்டின் மீது.. நாட்டு மன்னன் மீது விசுவாசம் இருக்கிற மாதிரி.. தகவல் தொழில்நுட்ப தளபதியா இருக்கிற ராஜ்சத்யன் ரொம்ப விசுவாசமா இருக்காரு. அவருடைய நடவடிக்கைகளை.. பேச்சுகளை.. செயல்பாடுகளைக் கவனிக்கும் போது.. நடப்பு சட்டமன்ற நிகழ்வுகளைக் காட்டுகின்றபோது.. ஒரு படைத் தளபதி எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி இருக்கிறார்.
படையின் தளபதி என்றால்.. மன்னனுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். இங்கே மன்னன் யார் என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அவர்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும். அதற்கான வழிகளை, தகவல் தொழிநுட்ப பிரிவு என்னும் சரியான கதவு வாயிலாகத் திறந்துவிட்டிருக்கிறார். தோழர்களை பக்குவமாக அரவணைக்கிறார். அற்புதமாக வகுப்பெடுக்கிறார். தகவல் தொழில்நுட்ப பிரிவுல இருக்கவங்க.. அண்ணன் தம்பி பாசத்தோடு, ஒரு குடும்ப உறவோடு இங்கே இருக்காங்க. கட்சிக்காக உழைப்பவர்கள் அதிமுகவில் வளரமுடியும். வேற எந்த கட்சிலயும் இந்த அங்கீகாரம் கிடைக்காது. அதிமுக என்பது ஒரு இரட்சகருடைய கட்சி. தெய்வீக உணர்வுடன் பகுத்தறிவை விதைத்து வளர்த்த கட்சி. தெய்வ நம்பிக்கையுடைய கட்சி. பிறருக்கு உதவக்கூடிய கட்சி.
சட்டமன்றத்தில் திமுக நடந்துகொண்ட விதம் மோசமான வெளிப்பாடு. எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்திய கோபம் உண்மையின் வெளிப்பாடு. இதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நமது நண்பர்கள், கட்சி நிர்வாகிகள், ஐ.டி.விங் நிர்வாகிகள் எல்லோரும் திமுகவுக்கு எதிரான தகவல்களை, அதிமுகவுக்கு சாதகமான உண்மைத் தகவல்களை, செய்திகளைப் பரப்பிக்கொண்டே இருக்கவேண்டும். தொடர்ந்து பரவும்போது, விவசாய நண்பர்கள், படைப்பாளிகள், உழைப்பாளிகள், பொழுதுபோக்காகப் பார்க்கும் பொதுமக்கள் அத்தனை பேர் மனதில் எடப்பாடி பழனிசாமி உயர்ந்து நிற்பார்.
இங்கே பேசும்போது, எல்லா பொறுப்பாளர்களும் ஒன்றியம் வாயிலாக ஒரு குழு அமைக்க வேண்டும் என்று சொன்னார்கள். மிக அற்புதமான யோசனை. விருதுநகர் மாவட்டத்திலிருந்து இதை ஆரம்பிக்க வேண்டும். ஒரு தொகுதியில் ஒரு இடத்தில் ஒரு நாளில் ஒரு மணி நேரம்கூட போதுமானது. ஒவ்வொரு தொகுதியிலும் 100 பேர் சேர்ந்தால், புதியதொரு சகாப்தத்தைத் தொடங்கி விடலாம். காலையில் 1 மணி நேரம், சாயங்காலம் 1 மணி நேரம், இப்படியே பயிற்சி கொடுத்தால் போதும். நமது நிர்வாகிகள் விழிப்புடன் இருக்கிறார்கள். நாங்களும் தெளிவாகிவிட்டோம்.
இந்த பயிற்சி பட்டறை ஆலோசனைக் கூட்டத்தில் எல்லோரும் ஆர்வமுடன் காணப்படுகிறார்கள். வெளியே வடை சாப்பிடப் போனவங்ககூட என்னமோ, ஏதோ நடக்குதுன்னு ஓடி வர்றாங்க. எல்லா விஷயங்களும் டக்கு டக்குன்னு தியேட்டரில் படம் பார்த்தமாதிரி இங்கே ஒட்டிட்டு இருக்காங்க. என்னென்னமோ பண்றாங்க.. நம்ம கட்சி கம்ப்யூட்டர் கட்சியா வளர்ந்திருக்கு. திமுகவுல கூலிக்குத்தான் வேலை பார்க்கிறாங்க. அதிமுகவுல கொள்கைக்காக வேலை பார்க்கிறாங்க.” என்றார்.
தமிழக அரசியல் களத்தில் மன்னர் ஆட்சி என்பது திமுகவுக்கு எதிரான விவாதப்பொருளாக இருக்கும்போது, அதிமுகவிலும் மன்னர் ஆட்சி என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது மேலும் விவாதத்தை அதிகரித்துள்ளது.