Skip to main content

பூண்டி ஏரியில் நீர் திறப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
Opening of water in Poondi lake Warning to coastal people

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (12.12.2024) நீர் இருப்பு 34.05 அடியாகவும் கொள்ளளவு 2839 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டியில் நீர் வரத்துக் காலை 06.00 மணி நிலவரப்படி 1290 கன அடியாக உள்ளது.

தற்போது, அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று பிற்பகல் 01.30 மணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 01.30 மணியளவில் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் உபரி நீராகத் திறக்கப்பட்டுள்ளது. எனவே நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம். ஒதப்பை, நெய்வேலி எறையூர், மேன்தோப்பு கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம்,  ஆகிய கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிகாவனுர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம். வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி மணலி, மணலி புதுநகர் ஆகிய கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்