சல்வார் உடை அணிந்ததற்காக சம்பந்தப்பட்ட பெண்ணை, ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், தர்ராங் மாவட்டத்தில் உள்ள கோங்கஜானி குவோரி கிராமத்தைச் சேர்ந்தவர் மேகாலி தாஸ் என்ற பெண். இவர் நேற்று மாவட்ட ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘சல்வார்-கமீஸ் அணிந்ததற்காக நான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளேன். மேலும், என்னை ரூ.5,000 பணம் அபராதம் கட்டு ஊர் மக்கள் என்னை வற்புறுத்துகின்றனர். நான் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறேன். சந்தையில் இருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும் என்பதால் பாரம்பரிய அசாமியரின் உடையான சல்வார் அல்லது சேலை அணிய விரும்பி அணிந்து வருகிறேன்.
சல்வார்- கமீஸ் அணிந்ததற்கு கிராம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால், உள்ளூர் கோயில் வளாகத்தில் என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்து அபராதம் கட்டச் சொல்கிறார்கள். கிராமத்தில் உள்ள மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. எனது மூன்று குழந்தைகளும் கடைகளுக்குச் செல்லக்கூடாது, கிராமங்களை சுற்றி வரக் கூடாது என்று கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும், பள்ளியில் தங்கள் குழந்தைகளை என் குழந்தைகளோடு பேசக் கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். இதனால், மன உளைச்சல் ஆகிறது’ என்று தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.